ஓபிஎஸ் புலி வருகிறது என சொல்கிறார்... புலியா? பூனையா? என பின்னர் தெரிய வரும் - ஆர்.பி.உதயகுமார்
அதிமுக தலைமை பதவி மீது எனக்கு ஆசையில்லை என ஓ.பன்னீர் செல்வம் நாடக பேச்சு பேசி வருகிறார் என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரை,
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ கூறியதாவது:-
"ஜெயலலிதா கனவுகளை எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி நனவாக்கியவர், எவ்வளவோ சோதனைகளை சாதனையாக மாற்றியவர், சுய நலமிக்கவர்களிடம் இருந்து அதிமுகவை மீட்டவர், அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொது நல பாதையில் பயணித்து வருகிறது.
அதிமுகவின் கிளை கழகம் முதல் தலைமை கழகம் வரை ஒட்டுமொத்த அதிமுகவும், அதிமுக தொண்டர்களும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாக உள்ளனர். அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் திமுகவை கொள்கை ரீதியாக எதிர்த்து நிற்கும், சூழலுக்கு ஏற்றவாறு பின் வாங்காமல் இருக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கு 99 சதவீத அதிமுகவினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்,
66 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 63 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்து உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு எத்தனை முறை சொன்னாலும் புரியாததை போல அதிமுக தொண்டர்கள் என்னை தான் ஆதரிக்கிறார்கள் என வாய்ப்பாடு பாடி வருகிறார்.
அதிமுக தலைமை பதவி மீது எனக்கு ஆசையில்லை என ஒ.பன்னீர் செல்வம் நாடக பேச்சு பேசி வருகிறார். அவரது நாடக பேச்சு மக்களிடம் எடுபடாது. ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை வெளியீடுவது சட்ட ரீதியாக நடக்கும். சசிகலா, டி.டி.வி. தினகரனை அழைத்ததன் மூலம் அவரது நிலைப்பாட்டு மாற்றத்திற்கு என்ன காரணம் என தெரியவில்லை.
எம்எல்ஏ அய்யப்பன் பன்னீர் செல்வத்திடம் சென்றது தவறான வழி. குழந்தையை மிட்டாயை காண்பித்து அழைத்து செல்வது போல எம்எல்ஏ அய்யப்பன் அழைத்து செல்லப்பட்டு உள்ளார். ஒ.பன்னீர் செல்வத்துக்கு ஒரு விதமான பதட்டம் இருக்க தான் செய்கிறது. பன்னீர் செல்வம் புலி வருகிறது என சொல்லி வருகிறார். அது புலியா? பூனையா? என பின்னரே தெரிய வரும்"
இவ்வாறு அவர் கூறினார்.