பஞ்சாயத்து உறுப்பினர் ஓட ஓட வெட்டிக்கொலை - நெல்லையில் தொடரும் பயங்கரம்
நெல்லையில் பஞ்சாயத்து உறுப்பினர் ஓட ஓட வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை,
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி மாணவர், சகோதரியை அதேபள்ளியில் படிக்கும் மாணவர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டினர். இந்த சம்பவத்தில் மாணவரும், அவரது சகோதரியும் படுகாயமடைந்த நிலையில் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மாணவனின் உறவினர் சம்பவ இடத்திலேயே மாரடைப்பில் உயிரிழந்தார். ஜாதி ரீதியிலான இந்த தாக்குதல் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, நெல்லையில் பஞ்சாயத்து உறுப்பினர் ஓட ஓட வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கீழநத்தம் வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 32). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்துள்ளது. ராஜாமணி கீழந்த்தம் பஞ்சாயத்து உறுப்பினராகவும் உள்ளார்.
இந்நிலையில், ராஜாமணி இன்று வழக்கம்போல் வீட்டில் உள்ள ஆடுகளை அருகில் உள்ள வாய்க்கால் பாலம் பகுதியில் மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர், மாலை ஆடுகளை வீட்டிற்கு கொண்டு செல்லும் வழியில் ராஜாமணியை இடைமறித்த கும்பல் அவரை ஓட ஓட சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ராஜாமணி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், ராஜாமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பஞ்சாயத்து உறுப்பினரை வெட்டிக்கொன்ற கும்பல் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.