2 மகன்கள் இறந்த துக்கத்தில் பெற்றோர் விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை - தேனியில் சோகம்


2 மகன்கள் இறந்த துக்கத்தில் பெற்றோர் விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை - தேனியில் சோகம்
x

2 மகன்கள் இறந்த துக்கத்தில் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டி கிராமத்தில் இந்திரா காலனியை சேர்ந்தவர் சின்னகதிர்வேல் (வயது 73). இவரது மனைவி சுப்பம்மாள் (58). இந்த தம்பதிக்கு செல்வராஜ், பிரகாஷ், வேல்முருகன் என்ற 3 மகன்கள் இருந்தனர். மேலும் 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இதில் கடந்த ஆண்டு செல்வராஜ், பிரகாஷ் ஆகிய 2 பேரும் உடல்நலக்குறைவால் இறந்து விட்டனர். சுப்பம்மாளும் உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்தார். அவரை கணவரே பராமரித்து வந்தார். இதனால் மகன்கள் இறந்த துக்கம், 6 பிள்ளைகள் இருந்தும் தன்னை கவனிக்க ஆள் இ்ல்லையே என சுப்பம்மாள் புலம்பிகொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக சின்னகதிர்வேலும், அவரது மனைவி சுப்பம்மாளும் மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வந்தனர். இதையடுத்து மகன்கள் இறந்த துக்கம் தாங்க முடியாததால் இருப்பதை விட சாவதே மேல் என அந்த தம்பதி எண்ணினர். இதனால் அவர்கள் 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இந்நிலையில் கடந்த 20-ந் தேதி இரவு இருவரும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது அவர்கள் விஷ மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றனர். இதில் 2 பேரும் மயங்கி விழுந்தனர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அன்றைய தினம் இரவு, நள்ளிரவு என 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

இதனை கேட்டதும் அவர்களது மகன், மகள்கள் கதறி அழுதனர். இதுகுறித்து வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன்கள் இறந்த துக்கத்தில் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story