மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப தயங்கும் பெற்றோர்: இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி கட்டிடம் - வகுப்பறைக்குள் மழைநீர் தேங்கும் அவலம்


மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப தயங்கும் பெற்றோர்: இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி கட்டிடம் - வகுப்பறைக்குள் மழைநீர் தேங்கும் அவலம்
x

கனகம்மாசத்திரம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ளதாலும், பள்ளி கட்டிடத்தின் வகுப்பறைக்குள் மழைநீர் புகுந்து தேங்குவதாலும் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டாபுரம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளி கட்டப்பட்டு 40 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இதனை சரிவர பராமரிக்காததால் அதன் மேற்கூரை ஓடுகள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளது. மேலும் அதன் சுவர்கள் மிகவும் இடிந்து விழும் நிலையில் இருந்து வருகிறது. இதேபோல் பள்ளி வளாகத்திலுள்ள சமையலறை கட்டிடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவை மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த பள்ளி கட்டிடம் மோசமான நிலையில் உள்ளதாலும், வகுப்பறைகள் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதால் இந்த பகுதி மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கி வருகின்றனர்.

திருவாலங்காடு ஒன்றியத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மோசமான நிலையில் உள்ள 22 பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றன. சேதமடைந்த இந்த பள்ளி கட்டிடம், சமையலறைக்கூடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்கும் முன் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்புவது வழக்கம். அதில், பள்ளி மாணவர்களின் உயிருக்கும், உடமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் உள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும். மின் சாதனங்களில் மின் கசிவு இருப்பதை சரிசெய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு விஷயங்களை கவனித்து அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. எனவே இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பள்ளியை ஆய்வு செய்து புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story