எடப்பாடி பழனிசாமி திருச்சியில் இன்று பிரசாரம் தொடங்குகிறார்


எடப்பாடி பழனிசாமி திருச்சியில் இன்று பிரசாரம் தொடங்குகிறார்
x

எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தையொட்டி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவிக்கப்பட்டு விட்டன. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதற்காக முதல் மற்றும் இரண்டாம் கட்ட சுற்றுப்பயண விவர பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அவர் தனது முதல் கட்ட பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறார். திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வண்ணாங்கோவில் நவலூர் குட்டப்பட்டில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.

இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு சேகரிக்கிறார். இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்று பேசுகின்றனர்.28-ந்தேதி மாலை 4 மணிக்கு விருதுநகர் தொகுதிக்குட்பட்ட சிவகாசி பாவடி தோப்புதிடல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம் அரண்மனை பொதுக்கூட்டத்தில் அவர் பேசுவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக, இரவு 7 மணிக்கு மதுரை பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதாக அ.தி.மு.க. தெரிவித்துள்ளது. இதேபோல் ஏப்ரல் 8-ந்தேதி இரவு 7 மணிக்கு மதுரை பழங்காநத்தத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்வதாக இருந்தது. தற்போது அது மாற்றப்பட்டு, அன்றைய தினம் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நடக்கும் பொது கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தையொட்டி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். முதல் கட்டமாக வரும் 31-ந்தேதி வரை எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதன் பிறகு ஏப்ரல் 1-ந்தேதி முதல் இரண்டாம் கட்ட பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.


Next Story