நாடாளுமன்ற தேர்தலில்பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் டெபாசிட் இழக்கும் :அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் டெபாசிட் இழக்கும் என்று செஞ்சியில் அமைச்சர் மஸ்தான் பேசினார்.
செஞ்சி,
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் செஞ்சியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் ரவிக்குமார், அருணகிரி, அமுதா ரவிக்குமார், பொருளாளர் ரமணன், செயற்குழு உறுப்பினர்கள் விஜயகுமார், நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக் தியார் மஸ்தான் வரவேற்றார்.
டெபாசிட் இழக்கும்
வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்படும் என்றார்.
விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவசிலை வைக்க இடம் தேர்வு செய்வது, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து ஒன்றிய, நகர,பேரூர், ஊராட்சி பகுதிகளில் பாக முகவர்கள் கூட்டம் நடத்துவது, இளைஞரணி சார்பில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பது,
விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து
சந்திரயான்-3 வெற்றிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், அதன் திட்ட இயக்குனராக செயலாற்றி இந்திய நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த நமது விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேலுக்கும் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவிப்பது,
உலக செஸ் விளையாட்டு போட்டியில் உலகில் இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இளம் வயது பிரேக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவிப்பது என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தமிழ்ச்செல்வன், மாசிலாமணி, சேதுநாதன், சீதாபதி சொக்கலிங்கம், மாநில தீர்மானகுழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன் ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், அண்ணாதுரை, துரை, இளம்வழுதி, மணிமாறன், திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், செஞ்சி ஒன்றிய குழு துணை தலைவர் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.