கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேரக் காப்பாளருடன் பயணிகள் கடும் வாக்குவாதம்


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேரக் காப்பாளருடன் பயணிகள் கடும் வாக்குவாதம்
x

2-வது நாளாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பரபரப்புடன் காணப்படுகிறது.

சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. அரசு பஸ்களும், ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்த சூழலில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திடீரென நேற்று இரவில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சிக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் பல மணி நேரமாக காத்திருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்றும் விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளுக்கு போதிய அளவில் பேருந்துகளை இயக்கவில்லை எனக்கூறி 2-வது நாளாக பேருந்துகளை சிறைபிடித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் கூறிய நிலையில், போதிய அளவில் பேருந்துகள் இல்லை என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேரக் காப்பாளருடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மண்டல நேரக்காப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடலூர், விழுப்புரம், திண்டிவனம், பாண்டிச்சேரி, சிதம்பரம், நெய்வேலி, திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இல்லை என புகார் தெரிவித்தனர் . பயணிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால், அங்கிருந்து நேரக்காப்பாளர் புறப்பட்டுச் சென்றார்.

இதன் காரணமாக 2-வது நாளாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பரபரப்புடன் காணப்படுகிறது.


Next Story