திருவண்ணாமலைக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவிப்பு; கோயம்பேட்டில் சாலை மறியலால் பரபரப்பு


திருவண்ணாமலைக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவிப்பு; கோயம்பேட்டில் சாலை மறியலால் பரபரப்பு
x

பவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவித்தனர். இதனால் கோயம்பேட்டு பஸ்நிலையத்தில் பஸ்களை வழிமறித்து பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

பவுர்ணமி கிரிவலம்

நேற்று தைப்பூசம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்காக ஏராளமான பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பஸ் நிலையத்தில் திரண்டனர். இந்த நிலையில் இரவு நீண்ட நேரம் ஆகியும் திருவண்ணாமலை, செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் ஆத்திரமடைந்தனர்.

இதையடுத்து 100-க்கும் மேற்பட்டோர் கோயம்பேடு பஸ் நிலையத்திற்குள் வெளியூர் பஸ்கள் செல்லும் பகுதியில் ஒன்று திரண்டு பஸ்களை வழிமறித்து, அவற்றை செல்லவிடாமல் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பயணிகள் மறியல்

தகவல் அறிந்து விரைந்து வந்த கோயம்பேடு போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பயணிகளுக்கும், போக்குவரத்து அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியது.

பின்னர் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு மாற்று பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டதையடுத்து, பயணிகள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து, பயணிகள் புறப்பட்டு சென்றனர்.

உரிய நேரத்தில் முறையாக பஸ் வசதிகள் செய்து தரப்படாததால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story