சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை மையத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள் - ஊழியர்கள் பற்றாக்குறையால் கவுண்ட்டர்கள் மூடல்

சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை மையத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் கவுண்ட்டர்கள் மூடப்பட்டது. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு முனையத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளா்வுக்கு பின்னர், விமான சேவைகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது நாள் ஒன்றுக்கு 42-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் 31 விமானங்கள் இரவு நேரங்களில் வரும் விமானங்கள் ஆகும். இதனால் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இரவு நேரத்தில் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்துவரும் விமான பயணிகள் மற்றும் வெளிநாடு செல்லும் பயணிகள் ஆகியோரை பரிசோதனை செய்வதற்காக 56 குடியுரிமை சோதனை மையம் உள்ளன. அதில் புறப்பாடு முனையத்தில் 22 கவுண்ட்டர்கள், வருகை பகுதியில் 34 கவுண்ட்டர்கள் அமைந்து உள்ளன. ஆனால் குடியுரிமை அலுவலா்கள் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான கவுண்ட்டா்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வருகை, புறப்பாடு பகுதிகளில் குடியுரிமை மையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதன் காரணமாக சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகள் குடியுரிமை சோதனை முடிந்து வெளியே வர தாமதம் ஏற்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.






