காஞ்சீபுரத்தில் முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் - கலெக்டர் தகவல்


காஞ்சீபுரத்தில் முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் - கலெக்டர் தகவல்
x

முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விளையாட்டுத்துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிப் பெற்று நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6,000 வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள www.sdat.tn.gov.in முகவரி மூலம் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க குறைந்தபட்ச தகுதிகளாக தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். சர்வதேச, தேசிய போட்டிகளில் முதலிடம், 2-ம், 3-ம் இடங்களில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். தகுதியான விளையாட்டுப் போட்டிகள் ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க வயது வரம்பு 31-01-2023-ம் ஆண்டில் 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரரின் மாதம் வருமான ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.

ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வெற்றி பெற்றவர்கள் இந்த திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள் மேற்காணும் தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம். விண்ணப்பங்கள் 20-03-2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 19-04-2023 ஆகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story