பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x

பேவர் பிளாக் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே உள்ள சுந்தரபாண்டியம் பேரூராட்சி 11-வது வார்டு பகுதியில் பேவர்பிளாக் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பேவர்பிளாக் பதிக்கும் போது சாலையின் இருபுறங்களிலும் தடுப்புச்சுவர் அமைப்பது வழக்கம். அந்த தடுப்புச்சுவரானது தங்கள் பகுதியை மறைப்பதாக கருதி 11-வது வார்டு பகுதியை சேர்ந்த ஒரு தரப்பு பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணன்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் நேரடியாக வரவேண்டும் என கூறி பேரூராட்சி அலுவலகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பேரூராட்சி தலைவர் ராஜம்மாள் மற்றும் செயல் அலுவலர் உஷா கிரேசி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரூராட்சி தலைவர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் பொதுமக்கள் வந்து 2 மணி நேரம் ஆகியும் பேரூராட்சி செயல் அலுவலர் பேரூராட்சிக்கு வருகை தரவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டினார்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர் ஆகியோர் தங்கள் பகுதிக்கு வந்து தங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற தலைவர் மற்றும் செயல் அலுவலர் உடனடியாக தங்கள் பகுதிக்கும் சேர்த்து பேவர் பிளாக் சாலை அமைப்பது உள்பட உங்களது கோரிக்கைகள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story