யாருக்கு யார் எதிரி என்பதை மக்கள் கூறுவார்கள்
தமிழகத்தில் அ.தி.மு.க. தான் பிரதான எதிர்க்கட்சி என்றும், யாருக்கு யார் எதிரி என்பதை மக்கள் கூறுவார்கள் என்றும் கோவையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் அ.தி.மு.க. தான் பிரதான எதிர்க்கட்சி என்றும், யாருக்கு யார் எதிரி என்பதை மக்கள் கூறுவார்கள் என்றும் கோவையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
வரவேற்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை செல்வதற்காக சேலத்தில் இருந்து கார் மூலம் கோவை விமான நிலையத்திற்கு நேற்று மாலை வந்தார். அவரை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதில் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண் குமார், அம்மன் அர்ச்சுனன், தாமோதரன், கே.ஆர்.ஜெயராமன், ஏ.கே. செல்வராஜ், வி.பி. கந்தசாமி, அமுல்கந்தசாமி, முன்னாள் மேயர் செ.ம.வேலுசாமி, முன்னாள் எம்.பி. தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
வீட்டு வரிகள், ஏனைய வரிகள் நிலுவையில் இருந்தால் அதற்கு வட்டி வசூல் செய்கிற அரசாக இந்த அரசு இருக்கிறது. முன்பு காலதாமதமாக வரி செலுத்தினாலும் அதற்கு எவ்வித வட்டியும் வசூல் செய்யப்படாமல் இருந்தது. ஆனால் காலம்தாழ்த்தி வீட்டு வரி கட்டினால் அதற்கும் வட்டி செலுத்த வேண்டும் என்று அறிவித்து உள்ளனர். தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளை வலைத்தளங்கள் வழியாக எடுத்து கூறினால் பொறுத்து கொள்ள முடியாமல் கைது செய்கின்றனர். குறிப்பாக அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடுவதுதான் இந்த அரசின் வாடிக்கையாக உள்ளது.
பிரதான எதிர்க்கட்சி
தி.மு.க.வின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததைதான் நிறைவேற்ற வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தி போராடுகின்றனர். எனவே தி.மு.க. அளித்த வாக்குறுதியின் படி இடைநிலை ஆசிரியர்கள் வைத்த கோரிக்கையை பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க.தான் உள்ளது. மக்களிடம் சென்று கேளுங்கள், யாருக்கு யார் எதிரி என்று சொல்வார்கள். 30 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்தது அ.தி.மு.க. கட்சி. பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து, மக்களிடத்திலேயே பெரும் வரவேற்பு பெற்றிருக்கிற ஒரு கட்சி. தி.மு.க.வுடன் யாருக்கு போட்டி என்பதில் அ.தி.மு.க.விற்கும், பா.ஜனதாவிற்கும் இடையே போட்டி இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாக கூறுகின்றீர்கள். அவர் மாய உலகில் மிதக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் வரும் போது அதற்கு விடிவு காலம் பிறக்கும்.
கூட்டணி
பா.ஜனதாவுடன் கூட்டணி குறித்து கடந்த 25-ந் தேதி அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெளிவாக அறிவித்து விட்டோம். வி.பி.துரைசாமி கூறும் கருத்துக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை. முதலாவது தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். அனைவருக்கும் பொதுவான மற்றும் தமிழகம் வளர்ச்சி பெற புதிய திட்டங்கள் வர வேண்டும். அதற்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
சிறுபான்மை மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்க வேண்டும். இதுதான் எங்களின் பிரதான கோரிக்கை. யார் ஆட்சிக்கு வந்தாலும் அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற வகையில் நாங்கள் இதை முன்னிறுத்துவோம். தமிழ்நாட்டு மக்களுடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.
மாநில பிரச்சினைகள்
தேசிய கட்சிகள் எல்லாம் பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கி உள்ளது. அந்தந்த மாநில பிரச்சினையைதான் அவர்களும் முன்னெடுக்கிறார்கள். உதாரணத்திற்கு கர்நாடகாவில் இருந்து நாம் தண்ணீர் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் அங்கு காங்கிரஸ்தான் ஆட்சியில் உள்ளது. இங்கே உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தண்ணீர் வேண்டும் என்று கேட்கிறார்கள். அங்கு உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு தண்ணீரை விடமாட்டேன் என்று கூறுகிறார்கள்.
இங்குள்ள பா.ஜனதா தண்ணீரை வேண்டுமென்று கேட்கிறது. அங்குள்ள பா.ஜனதாவினர் தண்ணீரை திறந்து விடக்கூடாது என்கிறார்கள். இதுதான் தேசிய கட்சிகளின் நிலைப்பாடு. அதற்காகத்தான் நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். தமிழக மக்கள்தான் வாக்களித்து எங்களுடைய வேட்பாளரை வெற்றி பெற செய்கிறார்கள். எனவே அவர்களுடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும். தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்க தான் நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம்.
சிறுபான்மையின மக்கள்
டி.டி.வி. தினகரன் இந்த தேர்தலோடு காணாமல் போய்விடுவார். விலாசம் தெரியாத ஒரு கட்சியாக அவரது கட்சி மாறிவிடும். சிறுபான்மையின மக்கள் மத்தியில் எங்களுக்கு வரவேற்பு சிறப்பாக உள்ளது. இன்றைக்கு கூட சிறுபான்மையின மக்கள் எங்கள் கட்சியில் இணைந்துள்ளனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், கட்சியை சேர்ந்தவர்கள் எங்களை சந்தித்து கோரிக்கைகளை எல்லாம் முன் வைத்துள்ளனர். அ.தி.மு.க.வை பொறுத்தவரை சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாப்பு இருக்கிற ஒரு கட்சி.
ஓ.பன்னீர் செல்வத்தின் மேல்முறையீட்டை சட்ட ரீதியாக சந்தித்து வெல்வோம். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டிருந்த தொழில்கள் தற்போது மெல்ல மெல்ல உயர்ந்து வரும் நிலையில் மின்கட்டணம் என்ற பாரத்தை அவர்கள் மீது சுமத்தி உள்ளனர். 12 சதவீதம் முதல் 55 சதவீதம் உயர்த்தி உள்ளனர். இந்தியாவிலேயே சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். இதில்தான் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இந்த தொழில்கள் மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டு உள்ளன.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ளன. அப்போது கூட்டணிக்கு எந்த கட்சி எங்களுடன் வந்து சேர்கிறதோ, அதை நாங்கள் நிச்சயமாக தெரிவிப்போம். குறிப்பாக அ.தி.மு.க. தலைமையில் அமைகிற கூட்டணி வலிமையான கூட்டணியாக, வெற்றி கூட்டணியாக அமையும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.