சென்னையில் 57 ஸ்பாஞ்ச் பூங்காக்கள் அமைக்க திட்டம் - நிலத்தடி நீர்மட்டம் 3 அடி வரை உயரும் என தகவல்


சென்னையில் 57 ஸ்பாஞ்ச் பூங்காக்கள் அமைக்க திட்டம் - நிலத்தடி நீர்மட்டம் 3 அடி வரை உயரும் என தகவல்
x

மழைநீரை நிலத்திற்குள் உறிஞ்சும் வகையில் ஸ்பாஞ்ச் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.

சென்னை,

சென்னையில் நீர் மேலாண்மை தொடர்பான பல்வேறு திட்டங்களை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. மழைக்காலங்களில் குடியிருப்புகள், தெருக்களில் மழைநீர் தேங்குவதை தடுக்க 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் குளங்கள், நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டு அங்கு மழைநீர் சேமிக்கப்படுகிறது. வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் ஏற்படும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மழைநீரை நிலத்திற்குள் உறிஞ்சும் வகையில் ஸ்பாஞ்ச் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. ஸ்பாஞ்ச் பூங்காக்கள் என்பது பஞ்சு போல் அதிக அளவு நீரை ஈர்க்கும் திறன் கொண்டதாக இருக்கும். இதில் எந்த விதமான சிமெண்ட் கட்டுமானங்களும் இருக்காது.

தண்ணீரை தேக்கும் குட்டையின் அடிப்பகுதியில் மணல், ஜல்லி போன்றவை 4 அடுக்குகள் வரை அமைக்கப்படும். இதன் மூலம் குட்டையில் தேங்கும் மழைநீரை நிலம் உறிஞ்சி தேக்கி வைத்துக்கொள்ள வழிவகை செய்யப்படும். இதனால் ஆண்டு ஒன்றிற்கு நிலத்தடி நீர்மட்டம் 1 முதல் 3 அடி வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்டமாக அம்பத்தூர், திருவிக நகர், அண்ணாநகர் மண்டலங்களில் தலா ஒன்றும், அடையாறு மண்டலத்தில் 2 ஸ்பாஞ்ச் பூங்காக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆலந்தூரில் 10 பூங்காக்கள், மணலியில் 8, தண்டையார்பேட்டையில் 6, ராயபுரத்தில் 6, திருவிக நகரில் 5, அண்ணாநகரில் 4, தேனாம்பேட்டையில் 3, கோடம்பாக்கத்தில் 3, அம்பத்தூரில் 3, வளசரவாக்கத்தில் 2, அடையாறில் 2, பெருங்குடியில் 2, சோழிங்கநல்லூரில் 2, மாதவரத்தில் 1 என மொத்தம் 57 பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.



Next Story