தேசிய கல்விக்கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கும் - மத்திய மந்திரி எல்.முருகன்


தேசிய கல்விக்கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கும் - மத்திய மந்திரி எல்.முருகன்
x

“தேசிய கல்விக்கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கும்” என்று நெல்லையில் நடந்த மாநாட்டில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசினார்.

ஏ.பி.வி.பி. மாநாடு

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) மாநில மாநாடு நெல்லை சந்திப்பில் நேற்று முன்தினம் தொடங்கியது. மாநாட்டில் நேற்று 2-வது நாள் நிகழ்ச்சிகள் நடந்தன. மாநில தலைவர் சவீதா தலைமை தாங்கினார். செயலாளர் கோபி முன்னிலை வகித்தார். பொருளாளர் பாலமுருகன் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தாய்மொழியை ஊக்குவிக்கும்

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளித்து நாட்டுக்கு சேவை செய்ய ஊக்குவிக்கும் சிறந்த அமைப்பு ஆகும். இந்த அமைப்பில் பயிற்சி பெற்று வந்தவர்கள் தற்போது நாட்டில் ஆட்சியில் பங்கெடுத்து, நாட்டை வழி நடத்தி கொண்டிருக்கிறார்கள்.கடந்த 8 ஆண்டுகளில் நாடு பெரும் முன்னேற்றம் அடைந்து உள்ளது. இந்த ஆண்டில் ஜி-20 மாநாடு இந்தியாவில் நடக்க இருக்கிறது. இது சாதாரண விஷயம் அல்ல. இந்த மாநாடு இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையில் நடப்பது பெருமையானதாகும்.

தேசிய கல்வி கொள்கை கடந்த 2018-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அனைத்து தரப்பினரிடமும் கேட்டறிந்து தேசிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டது. இது தாய்மொழியை ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது.

இந்தியா வல்லரசு நாடாகும்

பாதுகாப்பு துறைக்கு தேவையான ஆயுதங்கள் இறக்குமதியை குறைத்து, நாமே தயாரித்து பயன்படுத்துவதுடன், ஏற்றுமதியும் செய்கிறோம். நாம் இன்று உலகத்தை ஆண்டு கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு துறையிலும் நாம் முன்னேறி கொண்டிருக்கிறோம்.

76-ம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் நாம் இருக்கிறோம். வருகிற 2047-ம் ஆண்டு100-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் போது நமது நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து, உலக வல்லரசு நாடாக இருக்கும். அதற்கு இளைய சமுதாயம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியருக்கு விருது

இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தேசிய நல்லாசிரியர் சுப்பிரமணியனுக்கு, மத்திய மந்திரி எல்.முருகன் இளம் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தார்.


Next Story