"பா.ம.க. கூட்டணி - விரைவில் அறிவிப்பு" - அன்புமணி ராமதாஸ்
தங்கள் கொள்கைக்கு ஒத்துவரும் கட்சியோடு கூட்டணி அமைப்போம் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பை காண்பித்து வருகின்றன. தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்புகுழு என பல்வேறு குழுக்களை அரசியல் கட்சிகள் நியமித்து, தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், பா.ம.க. பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வரும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட பா.ம.க. முடிவு செய்துள்ளது.
எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு வழங்கப்பட்டது. மேலும் மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியில்லை என பா.ம.க. திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பா.ம.க. கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், "யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிப்போம். மருத்துவர் ராமதாசுக்கு 'பாரத ரத்னா' தரவில்லை என்பது தான் எனக்கு பெரிய வருத்தம். கூட்டணி குறித்து முடிவெடுக்க பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு முழு அதிகாரம் உண்டு. எங்கள் கொள்கைக்கு ஒத்துவரும் கட்சியோடு கூட்டணி அமைப்போம். இளைஞர்களை பாதிக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்" என்று அவர் கூறினார்.
முன்னதாக பொதுக்குழுவிவில் பேசிய ராமதாஸ், "பா.ம.க. தொண்டர்கள், நிர்வாகிகளின் விருப்பப்படி தனித்துப் போட்டியிட இப்போது நாம் தயாராக இல்லை. கூட்டணி அமைத்தே பா.ம.க. போட்டியிடும். மாநில நலன், தேசிய நலன், மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும். மக்களவை தேர்தலில் குறைந்தது 7 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். 12 தொகுதிகளை அடையாளம் கண்டு பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம்" என்று அவர் கூறினார்.