கடலூரில் நாளை கடையடைப்புக்கு பா.ம.க. அழைப்பு: போலீசார் குவிப்பு


கடலூரில் நாளை கடையடைப்புக்கு பா.ம.க. அழைப்பு: போலீசார் குவிப்பு
x

பா.ம.க.வின் முழு அடைப்பு போராட்டத்தை எதிர்கொள்ளும் விதமாக டி.ஐ.ஜி. பாண்டியன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்தி இருந்தது. ஆனால் கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு கேட்டு கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். அப்போது சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக என்.எல்.சி. உறுதி அளித்ததன் பேரில் நடந்த பேச்சுவார்த்தையில் சிலருக்கு உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில் என்.எல்.சி. நிறுவனம் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிலத்தை கையகப்படுத்தி இருந்த வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண் தோண்டி எல்லை வரையறை செய்தனர். மேலும் விவசாய நிலத்தை நவீன எந்திரங்கள் உதவியுடன் சமன் செய்யும் பணி நடைபெற்றது. இதை கண்டித்து பொதுமக்கள் மற்றும் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை பறித்து சொந்த மண்ணில் மக்களை அகதிகளாக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தின் போக்கை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் 11-ந் தேதி மாபெரும் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க. நிறுவன தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். இதனால் கடலூர் மாவட்டத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

பா.ம.க.வின் முழு அடைப்பு போராட்டத்தை எதிர்கொள்ளும் விதமாக டி.ஐ.ஜி. பாண்டியன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜராம் கூறுகையில், ''மாவட்டத்தில் வழக்கம்போல பேருந்துகள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் இயங்கும். சகஜ நிலையை நீடிக்கும்'' என்றார். மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியனும் ''நாளை கடைகள் வழக்கம்போல் செயல்படும்'' என்று தெரிவித்துள்ளார்.


Next Story