ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நள்ளிரவில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஆய்வு


ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நள்ளிரவில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஆய்வு
x

ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீஸ் கமிஷனர் சங்கர் திடீரென ஆய்வு செய்தார்.

சென்னை

ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின்பேரில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு கூடுதலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் போலீசார் ரோந்து பணியில் சரியாக ஈடுபடுகின்றனரா?, முக்கிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவது, கனரக வாகனங்களை சாலை ஓரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நிறுத்தும் பணிகளில் போக்குவரத்து போலீசார் ஈடுபடுகின்றனரா?, விழிப்புடன் பணியாற்றுகின்றனரா? என ஆய்வு செய்வதற்காக அம்பத்தூர் பஸ் நிலையம், கள்ளிகுப்பம், செங்குன்றம் பஸ் நிலையம், ஆலமரம், மஞ்சம்பாக்கம், பால்பண்ணை, 400 அடி சாலை, சத்தியமூர்த்தி நகர், எம்.எப்.எல் - மீஞ்சூர் 400 அடி சாலை, பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் கூறியதாவது:-

ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று அதிக இருட்டாக இருக்கும் என்பதால் குற்றவாளிகள் அந்த இருட்டு நேரத்தை பயன்படுத்தி பொதுமக்களிடம் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் நடத்த வாய்ப்பு உள்ளது. இதனை தடுப்பதற்காக "டார்க் நைட் ரவுண்ட்ஸ்" என்று சொல்லக்கூடிய இரவு ரோந்து பணி ெதாடங்கப்பட்டு உள்ளது.

இந்த பாதுகாப்பு பணியில் இணை கமிஷனர், துணை கமிஷனர், உதவி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளின் கீழ் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இது மாதம் ஒருமுறை ஆவடி போலீஸ் கமிஷனரகத்துக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் நடைபெறும்.

இந்த சோதனையில் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுபவர்கள், குற்ற செயல்களில் ஈடுபட்டு வாகனங்களில் தப்பி செல்பவர்கள் உள்ளிட்டவற்றை கண்காணிக்க இயலும். அனைத்து போலீஸ் பூத்துகளிலும் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் பூத்தை சுற்றிலும் எல்.இ.டி மின்விளக்குகள் அமைக்கப்படும். இதனால் பொதுமக்களுக்கு அவர்களுக்கு அருகில் போலீஸ் பூத் இருக்கிறது என்ற தைரியம் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story