கோவையில் பிரபல ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு


கோவையில் பிரபல ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு
x

கோவையில் பிரபல ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

கோவை,

கோவையை சேர்ந்த பிரபல ரவுடி ஆல்வின். இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனிடையே, கோவை பந்தயசாலைக்கு உள்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ஆல்வினை பிடிக்க சமீபத்தில் கோர்ட்டு பிடி ஆணை பிறப்பித்தது.

இந்நிலையில், ரவுடி ஆல்வினை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் கோவை கொடிசியா பகுதியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் இன்று அதிகாலை அங்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த ஆல்வின் போலீசாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளார். மேலும், மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு தலைமை காவலர் ராஜீவ் குமார் என்பவர் மீது ஆல்வின் தாக்கியுள்ளார். இதில் தலைமை காவலர் கையில் வெட்டு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரவுடி ஆல்வினை சுட்டார். இதில், ரவுடி ஆல்வின் காலில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த ரவுடி ஆல்வினையும், தலைமை காவலர் ராஜீவ் குமாரையும் கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோட முயன்ற பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story