"காவல்துறை கடமை தவறிவிட்டது.." சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி


காவல்துறை கடமை தவறிவிட்டது.. சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி
x
தினத்தந்தி 6 Nov 2023 11:13 AM IST (Updated: 6 Nov 2023 11:52 AM IST)
t-max-icont-min-icon

திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோருக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், திராவிடக் கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி கூறுகையில், சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு பேசியதன் விளைவாகத்தான் தற்போது திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும், எந்த கொள்கைக்கும் எதிராக பேசுவதற்கு நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் தெரிவித்தார்.

பிளவு ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு கூட்டத்திற்கும் அனுமதி வழங்கமுடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை கடமை தவறிவிட்டது எனவும் தெரிவித்தார்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் பொதுநிகழ்ச்சிகளில் பேசும்போது, சாதி, மதம், கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும் என்று கூறிய நீதிபதி, குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதில், மது, போதைப்பொருட்கள், ஊழலை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம் என்றும் அறிவுறுத்தினார்.


Next Story