திண்டுக்கல்: ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டியதால் கள்ளக்காதலி சரமாரியாக வெட்டி கொலை - வாலிபர் வெறிச்செயல்
திண்டுக்கல் அருகே ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டியதால் கள்ளக்காதலியை வெட்டி கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள கீழதிப்பம்பட்டியைச் சேர்ந்த அகில்ராஜ் என்பவரின் மனைவி பாண்டிடீஸ்வரி (வயது 27). இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளது. இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்ப்பட்டதால் கணவரை பிரிந்து பாண்டிஸ்வரி திண்டுக்கலில் வீடு பிடித்து தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் தாடிக்கொம்பு அருகே உள்ள சேடபட்டியைச் சேர்ந்த ஹவுஸ்பாண்டி (25) என்பவருக்கும், பாண்டிடீஸ்வரிக்கும் கடந்த 1 வருடத்திற்கு மேல் கள்ளத்தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாண்டிஸ்வரி தனது கள்ளக்காதலன் ஹவுஸ்பாண்டியிடம் ரூ. 10 லட்சம் வேண்டும் என்று அடிக்கடி கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஹவுஸ்பாண்டி நேற்று இரவு பாண்டிஸ்வரியை சேடபட்டிக்கு ஊருக்கு அருகே தனியாக வரவழைத்து உல்லாசமாக இருந்துவிட்டு பின்னர் பாண்டிஸ்வரியை சரமாரியாக வெட்டி கொலை செய்து உடலை கோழி தீவணம் சாக்கில் போட்டு கட்டியுள்ளார்.
பின்னர் நள்ளிரவு நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளில் தாடிக்கொம்பு - இடையகோட்டை சாலையில் பூலாங்குளத்திற்கு செல்லும் சாலையோரம் தூக்கி வீசிவிட்டு, வேடசந்தூர் போலீசில் நிலையத்திற்கு வந்து பணம் கேட்டு மிரட்டியதால் மது போதையில் பாண்டிஸ்வரியை கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார்.
வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் இன்று காலை விரைந்து சென்று 30 நிமிடம் தேடினர். அதன்பின் சாலை ஓரத்தில் சாக்கு மூட்டையில் இருந்த பாண்டிஸ்வரியின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
வேடசந்தூர் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஹவுஸ்பாண்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வேடசந்தூர் அருகே கள்ளக்காதலியை கள்ளக்காதலனே வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.