கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்


கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
x

கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது வடமாநில தொழிலாளர்களுக்கு போலீசார் உறுதுணையாக இருப்பதாக அறிவுறுத்தினர்.

சென்னை

ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இதனால் பயந்துபோன வடமாநில தொழிலாளர்கள் கூட்டமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வதாகவும் தகவல் பரவியது. விசாரணையில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான தகவல் வதந்தி என்பதும், அவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட சொந்த ஊர் புறப்பட்டு செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்தநிலையில் சென்னை கோயம்பேடு மார்கெட்டில் ஆயிரத்துக்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அவர்கள் பயப்படாமல் இருப்பதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் கடை உரிமையாளர்கள், வியாபாரிகளுடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.

உறுதுணையாக இருப்போம்

அப்போது போலீஸ் அதிகாரிகள், "வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. அவர்களை யாரும் தாக்கவில்லை. அவர்களுக்கு போலீசார் உறுதுணையாக இருப்பதாக" தெரிவித்தனர்.மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள், வடமாநில தொழிலாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள். அவர்களும் பல ஆண்டுகளாக இங்கு பணிபுரிந்து வரும் தங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.

செங்குன்றம்

இதேபோல் புழல், செங்குன்றம், வடபெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கட்டிடப்பணி உள்பட பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள். இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலீஸ் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று புழலில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு உதவி கமிஷனர் ஆதிமூலம் தலைமை தாங்கினார். புழல் இன்ஸ்பெக்டர் சண்முகம் முன்னிலை வகித்தார். இதில் 500-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது போலீசார், வடமாநில தொழிலாளர்களுக்கு தாங்கள் உறுதுணையாக இருப்பதாகவும், பயப்படாமல் இருக்கும்படியும் அறிவுறுத்தினர். அதற்கு வடமாநில தொழிலாளர்கள், தாங்கள் தமிழகத்தில் போதிய பாதுகாப்புடன் நல்ல முறையில் வேலை செய்வதாக தெரிவித்தனர்.


Next Story