போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு விசாரணை


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு விசாரணை
x

கீரனூர் அருகே ஆடு திருடர்களை பிடிக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு விசாரணை 29-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

திருச்சி மாவட்டம், நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன் (வயது 56). இவர் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ந் தேதி ரோந்து பணியில் இருந்தார். அவர் தனது சக போலீஸ் ஏட்டு சித்திரைவேல் என்பவருடன் நவல்பட்டு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பூலாங்குடியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது ஆடுகளை திருடிக்கொண்டு 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்களை பிடிக்க முயன்ற போது அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். இதையடுத்து அவர்களை பிடிக்க மோட்டார் சைக்கிளில் பூமிநாதன் விரட்டிக்கொண்டு பின்தொடர்ந்து சென்றார்.

கொலை வழக்கு விசாரணை

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டி ரெயில்வே பாலம் பக்கத்தில் சென்ற போது பூமிநாதனை தாக்கி அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு 3 பேரும் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தஞ்சாவூர் மாவட்டம், தோகூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 20) மற்றும் 15, 10 வயதுடைய 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இதில் மணிகண்டன் மீதான வழக்கு விசாரணை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சிறுவர்கள் 2 பேர் மீதான வழக்கு இளைஞர் நீதிக்குழுமத்தில் நடைபெறுகிறது.

தள்ளிவைப்பு

இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை வழக்கு தொடர்பான விசாரணை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி பூரண ஜெய ஆனந்த் முன்பு இன்று வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதிகட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் வழக்கின் விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.


Next Story