வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் - மின்சார வாரியம் தகவல்


வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் - மின்சார வாரியம் தகவல்
x

தொடர் மழையிலும் பாதுகாப்பான தடையற்ற சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் கடந்த 8 ஆண்டுகளில் கண்டிராத அளவு மிக கனமழை நேற்று (29/11/2023) பெய்த போதிலும், 240 துணை மின் நிலையங்களில் உள்ள 1,877 மின்பாதைகள் மூலம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் படி தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டது. கனமழையினால் 8 மின்பாதைகளில் பழுது ஏற்பட்ட போதிலும் உடனடியாக மாற்றுப்பாதையில் சுமார் அரை மணி நேரத்தில் மின்னூட்டம் வழங்கப்பட்டு, பழுதுகளும் சரிசெய்யப்பட்டன.

சென்னையில் உள்ள 41,311 மின்மாற்றிகளில் 2 மின்மாற்றிகளில் மட்டும் பழுது ஏற்பட்டது. அவைகளும் உடனடியாக சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. சென்னையில் சென்ற ஆண்டு மழையின்போது நீர் தேங்கிய பகுதிகளில் கண்டறியப்பட்ட 4,658 பில்லர் பாக்ஸ்களின் உயரம் ஒரு மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டதால் தற்போது மேற்படி பகுதிகளில் பாதுகாப்பான தடையற்ற சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், பருவ மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு முழுவதும் 3,00,887 மின்கம்பங்கள். 14,187 கி.மீ. மின் கம்பிகள், 19,759 மின்மாற்றிகள் மற்றும் மின் தளவாடப் பொருட்கள் கையிருப்பில் உள்ளன. மின்தடை ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்ய 15,300 களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

பொதுமக்கள் மின்தடை சம்பந்தமான புகார்களை மின்னக எண் 94987 94987 வாயிலாக ஒரே நேரத்தில் 65 புகார்களை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மின் பகிர்மான வட்ட மின்தடை நீக்கம் மையம் வழியாகவும் புகார்களை தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story