திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றிய தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை விழுப்புரம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி  கல்லூரி மாணவியை ஏமாற்றிய தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை  விழுப்புரம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றிய தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம்


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 21 வயதுடைய மாணவி. இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடந்த 2017-ம் ஆண்டில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

அப்போது அவருக்கும், சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த மூக்கனின் மகனான கூலித்தொழிலாளி மகேஸ்வரன் (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதில், மகேஸ்வரன், அந்த மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்தார். பின்னர் மாணவி, மகேஸ்வரனிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி கேட்டதற்கு அவர், பெற்றோரின் பேச்சை கேட்டு திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரனை கைது செய்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட மகேஸ்வரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட மகேஸ்வரன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கீதா ஆஜரானார்.


Next Story