போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து கைதி தற்கொலை - சாவில் மர்மம் இருப்பதாக மனைவி புகார்


போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து கைதி தற்கொலை - சாவில் மர்மம் இருப்பதாக மனைவி புகார்
x

போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து கைதி தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக மனைவி புகார் தெரிவித்தார்.

சென்னை

திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இந்திய அரசு போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை சென்னை மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை புலனாய்வு அதிகாரி சங்கர சுப்பிரமணியா உத்தரவின்பேரில் தனிப்படை அதிகாரிகள், சென்னை காரனோடை சுங்கச்சாவடி அருகே 20-ந் தேதி மாலை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காருக்குள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 48 கிலோ 300 கிராம் தடை செய்யப்பட்ட 'ஆம்பெடமைன்' என்ற போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள் கருப்பு நிற பாலிதீன் பைகளில் கட்டப்பட்டு மூட்டை மூட்டையாக இருந்ததை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.

இது தொடர்பாக காரை ஓட்டிவந்த ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த ராயப்ப ராஜு அந்தோணி (வயது 39) என்பவரை கைது செய்தனர். அவரை அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகத்தின் 3-வது மாடியில் வைத்து விசாரணை செய்தனர். விசாரணைக்கு பிறகு அவர் மீது வழக்குப்பதிவு செய்து பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்காக ஆவடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு குழுவினர் தயாராக இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கைதி ராயப்ப ராஜு அந்தோணி, அலுவலகத்தின் 3-வது மாடியில் இருந்து உள்புறமாக கீழே குதித்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சுய நினைவு இன்றி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை ஆவடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், ராயப்ப ராஜு அந்தோணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் வழக்குப்பதிவு செய்து, தற்கொலை செய்த கைதி ராயப்ப ராஜு அந்தோணி உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகிறார்.

இறந்த ராயப்ப ராஜூ அந்தோணி மீது ஏற்கனவே 2013-ம் ஆண்டு ஐதராபாத் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவில் வழக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

கணவர் இறந்த தகவல் அறிந்ததும் ஐதராபாத்தில் இருந்து அயப்பாக்கம் வந்த ராயப்ப ராஜூ அந்தோணியின் மனைவி சைலஜா, கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 3 தினங்களுக்கு முன்பு எனது கணவர், வேலை விஷயமாக விசாகப்பட்டினம் சென்றுவருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் இரவு என்னிடம் செல்போனில் பேசியவர், "என்னை போலீசார் சிறையில் அடைக்க போகிறார்கள். எனவே நீங்கள் சென்னை வந்து என்னிடம் உள்ள நகை, பணத்தை வாங்கிச்செல்லும்படி கூறினார்.

இந்தநிலையில் திடீரென போதைப் பொருள் கட்டுப்பாட்டு துறை புலனாய்வு போலீசார் நேற்று காலை எனக்கு போன் செய்து, எனது கணவர் இறந்துவிட்டதாக கூறினர். அதைகேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

நேற்று முன்தினம் இரவு என்னிடம் நன்றாக பேசிய என் கணவர், நேற்று காலை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறுவது அதிர்ச்சியாக உள்ளது. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கும் அவர் தைரியம் இல்லாதவர் கிடையாது. அவரை போலீசார் சித்ரவதை செய்துள்ளனர். அவரது சாவில் மர்மம் உள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story