பூண்டி ஏரியில் மதகுகளை சீரமைத்த பிறகு கிருஷ்ணா தண்ணீரை பெற திட்டம் - அதிகாரி தகவல்


பூண்டி ஏரியில் மதகுகளை சீரமைத்த பிறகு கிருஷ்ணா தண்ணீரை பெற திட்டம் - அதிகாரி தகவல்
x

பூண்டி ஏரியில் பழுதான மதகுகள் சீரமைக்கப்பட்ட பின்னர் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநில கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெற திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். கிருஷ்ணா நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடம் தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட வேண்டாம் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்கனவே ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்படி பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டது. பூண்டி ஏரியில் உள்ள தண்ணீர் இணைப்பு கால்வாய் மூலம் செம்மரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி. ஆகும். இதில் தற்போது 1.908 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் மொத்தம் 16 மதகுகள் உள்ளன. இதில் 8 மற்றும் 9-வது மதகு பழுதடைந்து உள்ளது. இதனை சரி செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மதகுகள் தயார் நிலையில் உள்ளது. இதுதொடர்பாக அரசுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனுமதி கிடைத்ததும் இந்த மதகுகள் பழுது பார்க்கப்படும். இந்த பணி 45 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது. இந்த பணி முடிந்ததும் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் பெறப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, பூண்டி ஏரியில் உள்ள 8 மற்றும் 9-வது மதகுகள் பழுது பார்க்க தயார் நிலையில் உள்ளன. இதுதொடர்பாக உரிய அனுமதி கிடைத்ததும் பணி தொடங்கும். இந்த பணி நடைபெறும்போது ஏரியில் உள்ள தண்ணீர் இருப்பை குறைக்க வேண்டும். எனவே தண்ணீர் முழுவதும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் மூலம் அனுப்பப்படும். எனினும் பேபி கால்வாய் மூலம் சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் அனுப்புவதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்றார்.


Next Story