நரிக்குறவர் நலவாரியத்தை திருத்தியமைத்து அரசாணை வெளியீடு


நரிக்குறவர் நலவாரியத்தை திருத்தியமைத்து அரசாணை வெளியீடு
x

திருத்தி அமைக்கப்பட்ட நரிக்குறவர் நலவாரியம் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசின் சார்பில் நரிக்குறவர்களுக்கு கல்வி, தொழில் புரிவதற்கான உதவி மற்றும் அவர்களுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்குவதற்காகவும், தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய 18 வயது முதல் 60 வயதிற்கு உட்பட்டவராகவும், நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

இந்த வாரியத்தின் மூலம் இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை, கல்வி, திருமணம், மகப்பேறு, கருச்சிதைவு மற்றும் கருக்கலைவிற்கான நிதி உதவித்தொகை, மூக்கு கண்ணாடிக்கான நிதி உதவி மற்றும் முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வாரியத்தினை திருத்தி அமைத்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது,

1.தமிழ்நாட்டில் வாழும் நரிக்குறவர் இனத்தவரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கென 2008-ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் அவர்களை தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்ட தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியம் இறுதியாக 2021-ஆம் ஆண்டில் மூன்று ஆண்டு காலத்திற்கு திருத்தியமைக்கப்பட்டது.

2.மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருந்த நரிக்குறவன், குருவிக்காரன் இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் 37வது இனமாக சேர்த்து வெளியிடப்பட்ட ஒன்றிய அரசின் அறிவிக்கை 17.03.2023 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து. தற்போது அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) அவர்களை தலைவராகக் கொண்டும் 8 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் நரிக்குறவர் இனத்தைச் சார்ந்த 13 அலுவல் சாரா உறுப்பினர்கள் கொண்டு தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் திருத்தி அமைத்து அரசாணை (நிலை) எண்: 139. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை (பமோ(1), நாள் 30.10.2023-இல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

3.திருத்தி அமைக்கப்பட்ட இந்நலவாரியம் தமிழ்நாடு நரிக்குறவர் இனத்தவரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கென அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களின் செயலாக்கத்தினை கண்காணித்து, இப்பிரிவினர் மேம்பாட்டை உறுதி செய்ய தக்க புதிய திட்டங்கள் அமல்படுத்துவது குறித்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்கும், என்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி. என். கயல்விழி செல்வராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்., என்று கூறப்பட்டுள்ளது.


Next Story