கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு: சாலையில் படகை நிறுத்தி நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம்


கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு: சாலையில் படகை நிறுத்தி நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம்
x

கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை நொச்சிக்குப்பம் மீனவர்கள் சாலையில் படகை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

சென்னை

சென்னை நொச்சிக்குப்பத்தில் கங்கா பவானி அம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவில் பொது இடத்தில் கட்டப்பட்டு உள்ளது என்றும், அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

ஐகோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாநகராட்சி மற்றும் காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் நொச்சிக்குப்பம் கங்கா பவானி அம்மன் கோவிலை இடிப்பதற்காக பொக்லைன் எந்திரத்துடன் நேற்று சென்றனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நொச்சிக்குப்பம் மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவிலுக்கு அருகில் உள்ள சாலையில் நாட்டுப்படகை நிறுத்தியும், தார்ப்பாயை தரையில் விரித்து அதில் அமர்ந்தும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் டிரோன் கேமரா மூலம் வீடியோவாக பதிவு செய்து கண்காணித்தனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ மக்களிடம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் செயலாளர் துர்கா மூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மீனவ மக்கள் தங்கள் தரப்பு கோரிக்கைகளை முன்வைத்து முறையிட்டனர்.

இதையடுத்து, மீனவ மக்களிடம் அவர்களின் கோரிக்கைகளை எழுத்துப் பூர்வமாக கேட்டு வாங்கிக்கொண்டு, அதுதொடர்பாக விரைவில் தெரிவிப்பதாக கூறி அங்கிருந்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் உள்பட அனைத்து அதிகாரிகளும் திரும்பிச் சென்றனர். இதனால் சுமார் 3 மணி நேரமாக நீடித்து வந்த போராட்டமும் முடிவுக்கு வந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து மீனவ மக்களை சேர்ந்த ரூபேஷ்குமார் என்பவர் கூறும்போது, "கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், இப்போது திடீரென்று எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் கோவிலை இடிக்க அதிகாரிகள் வந்தார்கள். அவர்களிடம் நாங்கள் ஜனவரியில் இதுதொடர்பாக மயிலை நொச்சிக்குப்பம் மீனவ கிராம சபை சார்பில் கோர்ட்டில் பொதுநல வழக்கு போடப்பட்டு இருப்பது பற்றி கூறினோம். வழக்கு நிலுவையில் இருக்கிறது. எனவே கோவிலை இப்போது இடிக்கக்கூடாது என்று முறையிட்டோம். எங்கள் தரப்பு கோரிக்கைகளை எழுதி வாங்கிக்கொண்டு சென்றுள்ளனர்" என்றார்.


Next Story