பிரதமரின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு: பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கருப்பு கொடியேற்றி போராட்டம்


பிரதமரின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு: பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கருப்பு கொடியேற்றி போராட்டம்
x

பிரதமரின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கருப்பு கொடியேற்றி போராட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்ததை கண்டித்தும் பெரம்பலூர் மேட்டு தெருவில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கருப்பு கொடிேயற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் சுப.சோமு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி தமது நெருங்கிய நண்பர் அதானிக்காக ஜனநாயகத்தை அழிக்க தயாராகி விட்டார். அதானியை பற்றி கேள்வி கேட்டதால் ராகுல்காந்தி குறி வைக்கப்படுகிறார். மோடியின் ஒத்துழைப்புடன் அதானி குழுமங்கள் 13 துறைமுகங்கள் மற்றும் விமான முனையங்களை கையாளுகிறது. அவை இந்தியாவில் துறைமுகங்களின் திறனில் 30 சதவீதம் ஆகும். அரசாங்க சலுகைகளுடன் கூடிய துறைமுகங்களை ஏலம் ஏதுமின்றி அதானி குழுமத்திற்கு வழங்கியதுடன், ஏலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ததுடன், வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இவையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நடக்க ஆரம்பித்தது. இதைவிட அப்பட்டமான பழிவாங்கும் போக்கு வேறு என்ன இருக்க முடியும்?. ராகுல் காந்தி மீது தொடுக்கப்படுகிற அடக்குமுறையின் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. இத்தகைய சர்வாதிகார, பாசிச நடவடிக்கைகளை முறியடிக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வழிகாட்டுதலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தீவிரமான பரப்புரை மூலம் மக்கள் ஆதரவை திரட்டுவோம். இது ராகுல்காந்தி மீது ஏவிவிடப்பட்ட தனிப்பட்ட தாக்குதல் அல்ல. இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலாகும். மோடியின் அராஜக ஆட்சியில் ஜனநாயகத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story