ஆலந்தூரில் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்


ஆலந்தூரில் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x

ஆலந்தூரில் நள்ளிரவில் ஏற்பட்ட மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

சென்னை

சென்னையை அடுத்த ஆலந்தூர் லப்பை தெரு, பொன்னியமன் கோவில் தெரு, ஜின்னா தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 நாட்களாக தினமும் இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர். மின்சார வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் அ.தி.மு.க.வினர் கோரிக்கை மனு அளிக்க வந்த போது, அ.தி.மு.க.-தி.மு.க .இடையே கைகலப்பு ஏற்பட்டு பரபரப்பானது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மின் தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் குழந்தைகளுடன் ஆலந்தூர் எம்.கே.என். சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை நள்ளிரவு முற்றுகையிட்டனர்.

சாலையில் பாய்களை விரித்து அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பா மற்றும் போலீசார் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்லாமல் மின்சார வாரிய உயர் அதிகாரிகள் வந்து எழுத்து முலமாக உறுதி மொழி தந்தால் தான் கலைந்து செல்வோம்.

இதையடுத்து ஆலந்தூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை பேசினார். பின்னர் புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எழுதி உறுதிமொழி தந்தார். இதையடுத்து 4 மணி நேர போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து புதிதாக மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்க அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டதன்படி, ஆலந்தூர் மண்டி தெருவில் பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை அகற்றி விட்டு 500 கே.வி. திறன் கொண்ட புதிய மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் பழுதடைந்த மின்சார கேபிள்களும் சீரமைக்கப்பட்டன.

இந்த பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட மின்சார வாரிய தலைமை பொறியாளர் சந்திரசேகர், மேற்பார்வை பொறியாளர் கீதா, செயற்பொறியாளர் நரேஷ் பாபு, உதவி செயற்பொறியாளர் கருப்பையா, ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் ஜின்னா தெரு, புதுப்போட்டை தெரு ஆகிய இடங்களில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.


Next Story