பணி நியமனம் கோரி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போராட்டம்; 220 பேர் மீது வழக்குப்பதிவு


பணி நியமனம் கோரி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போராட்டம்; 220 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 6 Sep 2023 2:56 PM GMT (Updated: 6 Sep 2023 3:22 PM GMT)

போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை ரெயில்வே போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

சென்னை,

சென்னை ஐ.சி.எஃப்.-ல் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்கக் கோரி நேற்று சுமார் 200-க்கும் மேற்பட்டோர் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக ஐ.சி.எஃப்.-ல் பயிற்சி பெற்றவர்களுக்கு 25 ஆண்டுகளாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் பணி நியமனம் வழங்கவில்லை என்றும், இதனால் சுமார் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதனை வலியுறுத்தி ஏற்கனவே கடந்த மாதம் 20-ந்தேதி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் சார்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டது. இருப்பினும் தற்போது வரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை எனக்கூறி நேற்று போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை ரெயில்வே போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இந்நிலையில் போராட்டம் நடத்தியது தொடர்பாக 220 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்டர்ல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



Next Story