சாலை பணியாளர்கள் முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டம்


சாலை பணியாளர்கள் முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்தினருடன் கையெழுத்திட்டு சாலை பணியாளர்கள் முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் கோட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் குடும்பத்தினருடன் கையெழுத்திட்டு தபால் மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், பொதுப்பணி கட்டிடங்கள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கும் நேற்று கோரிக்கை முறையீடு மனு அனுப்பும் போராட்டம் நடத்தினர்.

இதையொட்டி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சங்கத்தின் கோட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் சங்கத்தினர் குடும்பத்தினருடன் சாலை பணியாளர்கள் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் இறந்தோரின் வாரிசுகளுக்கு நெடுஞ்சாலைத்துறையிலேயே கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.

மனு அனுப்பி வைப்பு

சாலை பணியாளர்கள் அனைவரையும் தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்கள் என ஊதிய மாற்ற ஒரு நபர் குழுவின் பரிந்துரையின் படி ஊதியம் ரூ.5 ஆயிரத்து 200-ரூ.20 ஆயிரம் தர ஊதியம் ரூ.1,900 என நிர்ணயம் செய்து ஊதியம் வழங்கிட வேண்டும். சாலை பணியாளர்களுக்கு 10 சதவீதம் ஆபத்து படி, சீருடை-சலவைப்படி, நிரந்தர பயணப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சரும், அமைச்சர் எ.வ.வேலுவும் நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். கோட்ட செயலாளர் சுப்ரமணியன் விளக்கவுரையாற்றினார். பின்னர் சாலை பணியாளர்கள் கோரிக்கை மனுவில் குடும்பத்தினருடன் கையெழுத்திட்டு தபால் மூலம் தமிழக முதல்-அமைச்சருக்கும், அமைச்சர் எ.வ.வேலுவுக்கும் அனுப்பி வைத்தனா்.


Next Story