அ.தி.மு.க. சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்
கலெக்டர் அலுவலகங்கள் முன்பு நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க. அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஊழல் முறைகேடுகள், கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டதாகவும், இதற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அனைத்து மாவட்டங்களில் வரும் 29-ந்தேதி(நாளை) திங்கள்கிழமை காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன்படி நாளை கலெக்டர் அலுவலகங்கள் முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். கலெக்டர் அலுவலகங்கள் இல்லாத இடங்களில் தாசில்தார் அலுவலகங்கள் அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.