பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மொட்டை அடித்து போராட்டம்


பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மொட்டை அடித்து போராட்டம்
x

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மொட்டை அடித்து, நெற்றியில் பட்டை நாமம், கையில் திருவோடு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை

விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு

காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வளத்தூர், நெல்வாய், மடப்புரம், மேல்பொடவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம், சிங்கிலி பாடி, மகாதேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4,791 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதால் ஏகனாபுரம், நாகப்பட்டு, தண்டலம், நெல்வாய், மேலேறி உள்ளிட்ட கிராமங்களில் விவசாய விளை நிலத்தோடு, குடியிருப்புகளும் அகற்றப்பட்டு தங்களை வாழ்வாதாரமும், முகவரியும் அழிக்கப்படும் என்பதால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாள்தோறும் இரவு நேரங்களில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக 5 கிராம சபை கூட்டங்களிலும், விளைநிலங்களையும் குடியிருப்புகளையும் இழக்கும் கிராமமான ஏகனாபுரம் கிராம மக்கள் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 5 முறை தீர்மானங்களை நிறைவேற்றி எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மொட்டை அடித்து போராட்டம்

இந்த நிலையில் ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டத்தின் 264-வது நாளான நேற்று ஆண்கள், பெண்கள் என 100 பேர் மொட்டை அடித்து, நெற்றியில் பட்டை நாமம் போட்டு கைகளில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்து கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுது நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். கிராம மக்களின் போராட்டத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story