ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை விரிவாக்கப்பணி: அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்; நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு


ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை விரிவாக்கப்பணி:      அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்;  நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Sep 2023 6:45 PM GMT (Updated: 29 Sep 2023 6:47 PM GMT)

நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை விரிவாக்கப்பணிகளில் ஈடுபடும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

சாலை விரிவாக்கப்பணி

கடலூர் கோண்டூர் முதல் மடப்பட்டு வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.230 கோடி செலவில் சாலை விரிவாக்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஒரு சிலருக்கு ஆதரவாகவும், லஞ்சம் பெற்றுக் கொண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ஒருபுறம் கால்வாய் அமைக்காமல் சாலை அமைத்து வருவதை கண்டித்து பொதுமக்கள் சார்பில் செப்டம்பர் 29-ந்தேதி ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அரசியல் கட்சியினர் அறிவித்திருந்தனர்.

உண்ணாவிரத போராட்டம்

அந்த வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும், சாலை விரிவாக்கப்பணிகளை சரியான முறையில் மேற்கொள்ளாத நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்தும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் பொதுநல இயக்கங்கள் சார்பில் நேற்று காலை முதல் மாலை 5 மணி வரை நெல்லிக்குப்பம் அம்பேத்கர் சிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் ம.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், வி.சி.க.வை சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், நகர அ.தி.மு.க. செயலாளர் காசிநாதன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், சமூக ஆர்வலர் குமரவேல், வி.சி.க. நகர செயலாளர் திருமாறன், த.வா.க. கார்த்திக், பகுதி குழு செயலாளர் ஜெயபாண்டியன், கவுன்சிலர்கள் முத்தமிழன், புனிதவதி, நகர தலைவர் ரவிக்குமார் மற்றும் ஆட்டோ, வேன், கார் ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொது நல அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு போராட்டத்தை விளக்கி பேசினர்.

கண்டன கோஷம்

போராட்டத்தின் போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டன. பொதுமக்கள் போராட்டம் பற்றி தகவல் அறிந்த கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், வி.சி.க. கடலூர் மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். போராட்ட முடிவில் அரசியல் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ஆக்கிராமிப்புகளை அகற்றி சாலையில் இருபுறமும் சரியான முறையில் விரிவாக்கப்பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ளாவிட்டால் எங்கள் போராட்டம் தொடரும் என கூறி, கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story