டாஸ்மாக் கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நூதன போராட்டம்
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு டாஸ்மாக் கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் எதிரே புதிதாக டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதை அறிந்த சமூக ஆர்வலரான வக்கீல் சக்திராஜன் மற்றும் பொதுமக்கள், அங்கு டாஸ்மாக் கடை திறந்தால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு வரும் வியாபாரிகள், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். மேலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். இதை தவிர்க்க டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இருப்பினும் நேற்று செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமூக ஆர்வலர் சக்திராஜன் தலைமையில் பொதுமக்கள் செஞ்சியில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இனிப்பு வழங்கி போராட்டம்
இதில் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என கூறி கோரிக்கை மனு அளித்தும், அதனை கண்டுகொள்ளாமல் டாஸ்மாக் கடையை திறந்த அதிகாரிகளுக்கும், அரசுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இனிப்பு வழங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் டாஸ்மாக் கடையை உடனே மூட வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதில் வக்கீல்கள் பாலாஜி, பாஸ்கரையா, ஆனந்தராஜ், மணிகண்டன், பாலமுருகன், சக்திவேல், சுதன், முத்துகிருஷ்ணன் மற்றும் சிவாஜி ஸ்ரீரங்கன், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.