நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x

திருவள்ளூர் அருகே போளிவாக்கம் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் அரசு பஸ் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர்

போளிவாக்கம் பஸ்நிறுத்தம்

திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் சத்திரம் கண்டிகை, குன்னத்தூர், பூவல்லிக்குப்பம் மப்பேடு, கீழச்சேரி, அழிஞ்சிவாக்கம், சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் நோயாளிகள் பொதுமக்கள் என தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டவர்கள் திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், போளிவாக்கம் சத்திரம் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் செங்கல்பட்டு முதல் திருவள்ளூர் செல்லும் தடம் எண் 82 -சி கொண்ட பஸ் நிற்காமல் செல்வதால் பள்ளி மாணவர்கள், முதியோர், நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் பெரும் அவதிக்குள்ளானதாக தெரிகிறது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு, திருவள்ளூர் பேருந்து பணிமனையிலும் , திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்த பின்னர், பஸ்சை குறிப்பிட்ட பேருந்தை நிறுத்த அதிகாரிகள் உத்தரவிட்டும் பஸ்சை நிறுத்தாமல் டிரைவர் இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

பஸ் சிறைபிடிப்பு

இதையடுத்து நேற்று மாலை திருவள்ளூர் பகுதியில் பள்ளி முடிந்து மாணவர்கள் சென்ற பேருந்து, போளிவாக்கம் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் நிற்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். மேலும் பஸ் டிரைவருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் திருவள்ளூர் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை 4 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக பணி முடித்து வீட்டுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள். அதைத்தொடர்ந்து அங்கு வந்த மணவாளநகர் போலீசார் பொதுமக்களை சமரசம் செய்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story