மீன் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்


மீன் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Feb 2023 7:30 PM GMT (Updated: 12 Feb 2023 7:30 PM GMT)
சேலம்

சங்ககிரி

சங்ககிரி அருகே ஏரியில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி, மீன் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மீன் பிடி குத்தகை

சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியத்துக்குட்பட்ட இருகாலூர் ஊராட்சி கல்லேரியில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மீன் பிடிக்க ஒன்றிய நிர்வாகம் சார்பில் குத்தகை விடப்பட்டது. குத்தகைதாரர் மீன் குஞ்சுகளை ஏரியில் விட்டு அதனை வளர்த்து வந்தார். அவற்றுக்கு உணவாக ஆடு, மாடு, கோழி மற்றும் காய்கறி கழிவுகள் ஏரியில் கொட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஏரி மூலம் பாசன வசதி பெறும் விவசாய நிலங்கள் மற்றும் அருகில் உள்ள விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக கடந்த மாதம் 26-ந் தேதி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனால் ஏரியில் மீன் பிடிக்கும் குத்தகை ரத்து செய்யப்படுவதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அங்கு மீன்கள் பிடிக்கப்படவில்லை.

பொதுமக்கள் போராட்டம்

இந்தநிலையில் நேற்று காலை 8 மணிக்கு ஏரியில் குத்தகைதாரர் மீன் பிடித்தார். இதனை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஏரியில் திரண்டனர். அவர்கள் மீன்களை பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மல்லசமுத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் குத்தகைதாரரிடம் மீன்களை பிடிக்ககூடாது என்று அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் அங்கிருந்து திரும்பி சென்றார். பின்னர் பொதுமக்களும் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். :-


Next Story