வெளியானது குரூப் 2 பணியிடங்களுக்கான கலந்தாய்வு தேதி - விவரம்


வெளியானது குரூப் 2 பணியிடங்களுக்கான கலந்தாய்வு தேதி - விவரம்
x

குரூப் 2 பணியிடத்திற்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு, கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2ஏ பணி நிலையில் காலியாக உள்ள 6,151 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் பேர் தேர்வை எழுதினர்.

இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, அக்டோபர் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகின. குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 11-ம் தேதி வெளியானது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. நேற்று (02-02-24) வெளியிட்டது.

இந்நிலையில் ஒருங்கிணைந்த குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு பிப்.12 முதல் பிப்.17ம் தேதி வரை நடைபெறும். இதற்கான கலந்தாய்வு பிப்ரவரி 21ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II அறிவிக்கை எண்.03/2022, நாள்: 23.02.2022, தொகுதி-II நேர்முகத் தேர்வு பதவிகளுக்கான முதல் கட்ட நேர்முகத் தேர்வு 12.02.2024 முதல் 17.02.2024 வரை நடைபெற உள்ளது. இதற்கான கலந்தாய்வு 21.02.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story