ராஜஸ்தான்: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை


ராஜஸ்தான்: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 24 Jan 2024 11:18 AM IST (Updated: 24 Jan 2024 11:19 AM IST)
t-max-icont-min-icon

மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே.இ.இ நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்த சூழலில் சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரே ஆண்டில் மட்டும் கோட்டா நகரில் பயின்று வந்த 26 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க கோட்டாவில் உள்ள பயிற்சி மையங்களுக்கு ராஜஸ்தான் அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

இந்த நிலையில் கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முகமது சையிது என்ற மாணவர், கோட்டாவில் உள்ள ஜவகர் நகர் பகுதியில் தங்கி நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். அவர் 2-வது முறை நீட் தேர்வு எழுத தயாராகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முகமது சையிது தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story