பாலியல் வன்கொடுமை வழக்கு: தப்ப முயன்ற குற்றவாளிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு..!!
ஸ்ரீபெரும்புதூர் அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், கடந்த 11-12-2022 அன்று இரவு சாலையில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அப்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதுபற்றி ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த நாகராஜ் (வயது 31) மற்றும் பிரகாஷ் (31) இருவரும் காஞ்சீபுரம் அடுத்த பாலு செட்டிசத்திரம் பகுதியில் பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார், அவர்களை சுற்றி வளைத்தனர்.
அப்போது நாகராஜ் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை சுட்டும், பிரகாஷ் கத்தியால் வெட்டவும் முயன்றனர். இதனால் போலீசார், இருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் இருவரது காலிலும் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவர்களை மடக்கி பிடித்த போலீசார், இருவரையும் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.