காஞ்சீபுரம் காளிகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு


காஞ்சீபுரம் காளிகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
x

காஞ்சீபுரம் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான மனை கட்டிடம் பெரியகாஞ்சீபுரம் ஜவஹர்லால் தெருவில் 2,486 சதுர அடி பரப்பளவில் உள்ளது. இந்த சொத்திற்கு ரூ.28 லட்சம் வரை வாடகை செலுத்தாமல் பிரசாந்த் மற்றும் நந்தகுமார் ஆகியோர் சட்ட அனுமதியின்றி ஆக்கிரமித்தும், அனுபவித்தும் வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக காஞ்சீபுரம் கோட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கினை விசாரித்த இணை ஆணையர் உரிய கால அவகாசம் கொடுத்தும் வாடகை நிலுவைத்தொகையை செலுத்த தவறியதால் ஆக்கிரமிப்பை அகற்றி இடத்தினை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்து கோவில் வசம் ஒப்படைக்குமாறு கோவில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இணை ஆணையர் உத்தரவைத் தொடர்ந்து, காஞ்சீபுரம் அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துரெத்தினவேலு, ஆய்வாளர் பிரித்திகா, கோவில் செயல் அலுவலர்கள் தியாகராஜன், ஸ்ரீதர் ஆகியோர் போலீசார், வருவாய்த்துறை, மின்வாரிய அதிகாரிகளுடன் சென்று ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு கோவில் நிர்வாகத்திடம் சொத்தை ஒப்படைத்துள்ளனர்.


Next Story