பிளஸ்-2 மாணவிக்கு வளைகாப்பு நடத்துவதுபோல் 'ரீல்ஸ்' வீடியோ: ஆசிரியை மீது நடவடிக்கை


பிளஸ்-2 மாணவிக்கு வளைகாப்பு நடத்துவதுபோல் ரீல்ஸ் வீடியோ: ஆசிரியை மீது நடவடிக்கை
x

அரசு மகளிர் பள்ளியில் பிளஸ்-2 மாணவிகள் சக மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போல் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பிளஸ்-2 மாணவிகள் சிலர் சக மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போன்று அழைப்பிதழை செல்போனில் தயார் செய்தனர். தொடர்ந்து பள்ளியின் மேல் தளத்தில் வளைகாப்பு நடத்த தேவையான பொருட்களுடன் மாணவிகள் வந்தனர்.

அதன்பின்னர் ஒரு மாணவியை அமர வைத்து பேப்பர் மாலை அணிவித்து, சாப்பாடு வகைகள் வைத்து, வளைகாப்பு நடத்துவது போன்று ரீல்ஸ் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. வீடியோவிற்கு அதிகமானோர் லைக்குகளையும், எதிர்ப்பு தெரிவித்து கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார். இந்த நிலையில், பிளஸ்-2 மாணவிக்கு, சக மாணவிகள் வளைகாப்பு நடத்தி ரீல்ஸ் பதிவிட்ட விவகாரத்தில் வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமை ஆசிரியர் பிரேமாவிடம் இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

1 More update

Next Story