இறந்த மூதாட்டியின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம்
க.பரமத்தி அருகே இறந்த மூதாட்டியின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மயானம் பிரச்சினை
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள காருடாம்பாளையம் ஊராட்சி பாரதி நகரை சேர்ந்த யாரேனும் இறந்தால் அவர்களது உடலை எரிப்பதற்காக கரூர்- கோவை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஒரு மயானம் உள்ளது. அந்த மயானத்தின் அருகே உள்ள நிலத்தின் உரிமையாளர் தற்காலிகமாக அந்த மயானத்தில் யாரும் உடலை எரிக்கக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதற்கான ஆணையை பெற்றுள்ளார். இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாரதிநகரை சேர்ந்த யாரேனும் இறந்தால் அவர்களது உடலை எரிப்பதற்காக மற்றொரு இடத்தில் ஒரு மயானம் ஏற்பாடு செய்து கொடுத்தனர். இந்த மயானத்திற்கு செல்ல வேண்டுமானால் காருடாம்பாளையம் ஊரின் மையப்பகுதியில் உள்ள கோவில் வழியாக செல்ல வேண்டும். இதனால் அந்த மயானம் வேண்டாம் என்று பாரதி நகரை சேர்ந்த சிலர் கூறி வந்ததாக தெரிகிறது.
போராட்டம்
இந்தநிலையில் பாரதி நகரை சேர்ந்த 75 வயது மூதாட்டி நேற்று முன்தினம் மாலை இறந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் முடிந்து உடலை எரிப்பதற்காக நேற்று மதியம் கரூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மயானத்திற்கு உறவினர்கள் கொண்டு செல்ல திட்டமிட்டனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் அங்கு உடலை கொண்டு செல்ல அனுமதி இல்லை, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காருடாம்பாளையத்தில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் மூதாட்டியின் உடலை அங்கு கொண்டு செல்ல மறுப்பு தெரிவித்து, இறந்த மூதாட்டியின் உடலை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அரவக்குறிச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாதுரை, புகழூர் தாசில்தார் முருகன், க.பரமத்தி வருவாய் ஆய்வாளர் மோகன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து பாரதிநகர் மக்களுக்கு புதைப்பதற்காக கொடுக்கப்பட்ட சுடுகாட்டில் அந்த மூதாட்டியின் உடலை அவரது உறவினர்கள் தகனம் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.