சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் டாப்-10 நகரங்கள்; சென்னைக்கு எந்த இடம்...?


சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் டாப்-10 நகரங்கள்; சென்னைக்கு எந்த இடம்...?
x
தினத்தந்தி 1 Nov 2023 6:43 PM IST (Updated: 1 Nov 2023 6:52 PM IST)
t-max-icont-min-icon

நாட்டில் 2022-ம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துகளின் எண்ணிக்கையில், 50 நகரங்களின் பட்டியலில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது.

சென்னை,

இந்தியாவில், 2022-ம் ஆண்டு நகரங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகள் பற்றிய விவரங்களை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இதில், 10 லட்சம் பேர் மக்கள் தொகை கொண்ட 50 நகரங்கள் கணக்கில் கொள்ளப்பட்டு உள்ளன. இந்த பட்டியலில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது.

இதன்படி, டெல்லியில் சாலை விபத்து எண்ணிக்கை 5,652 ஆக உள்ளது. இதனை தொடர்ந்து இந்தூர் (4,680), ஜபல்பூர் (4,046), பெங்களூரு (3,822), சென்னை (3,452), போபால் (3,313), மல்லாபுரம் (2,991), ஜெய்ப்பூர் (2,687), ஐதராபாத் (2,516) மற்றும் கொச்சி (2,432) ஆகிய 9 நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

கணக்கில் கொள்ளப்பட்ட 50 நகரங்களில் நடந்துள்ள சாலை விபத்துகளில், 46.37 சதவீதம் இந்த 10 நகரங்களில் நடந்துள்ளன. 2022-ம் ஆண்டில் இந்த 50 நகரங்களில் 76,752 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதனால், 17,089 பேர் உயிரிழந்து உள்ளனர். 69,052 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த 50 நகரங்களும் 17 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ளன.

நாட்டில் ஏற்பட்ட மொத்த விபத்துகளில் 16.6 சதவீதமும், விபத்து தொடர்புடைய மொத்த மரணங்களில் 10.1 சதவீதமும் இந்த நகரங்களில் ஏற்பட்டு உள்ளன.

இவற்றில், 2021-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2022-ம் ஆண்டில், 10 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட சென்னை, தன்பாத், லூதியானா, மும்பை, பாட்னா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களை தவிர, மற்ற அனைத்து நகரங்களிலும் சாலை விபத்துகள் மற்றும் விபத்து தொடர்புடைய மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

இதேபோன்று சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை, கிராமப்புறங்களில் அதிக அளவும் (68 சதவீதம்) மற்றும் நகர்ப்புறங்களில் குறைந்த அளவும் (32 சதவீதம்) காணப்படுகிறது.


Next Story