கரூரில் ஜவுளி வர்த்தக மேம்பாட்டு மையம் அமைக்க கோரிக்கை


கரூரில் ஜவுளி வர்த்தக மேம்பாட்டு மையம் அமைக்க கோரிக்கை
x

ஜவுளி வர்த்தக மேம்பாட்டு மையம் கரூரில் அமைக்க வேண்டும் என மத்திய மந்திரி பியூஸ் கோயலிடம் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கரூர்

மத்திய மந்திரியுடன் சந்திப்பு

கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நிர்வாக மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மத்திய வர்த்தகம், தொழில், உணவு, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயலை திருப்பூரில் சந்தித்தனர். அப்போது, எக்ஸ்போர்ட் எக்ஸலன்ஸ் என்ற சிறப்பு அங்கீகாரத்தை பெற்றுள்ள கரூர் நகரில் சுமார் 800 ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் ரூ.9 ஆயிரம் கோடி அளவிற்கு வீட்டு உபயோக ஜவுளிகளை உற்பத்தி செய்து அதில் ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.

2030-ம் ஆண்டில் ரூ.25 ஆயிரம் கோடி ஜவுளி உற்பத்தி என்ற இலக்கை கொண்டு கரூர் ஜவுளி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஜவுளி கருத்தரங்கு

இந்த மிகப்பெரிய இலக்கை அடைவதற்கு தேவையான புதுமையான ஜவுளிகளை வடிவமைத்தல், அதற்கான ஆராய்ச்சி, தொழில் நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் செயற்கை இழையிலான ஜவுளி பொருட்களை வடிவமைத்தல், மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்படும் ஜவுளி பொருட்கள் ஆகியவற்றுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 2 நாள் ஜவுளி கருத்தரங்கு கரூரில் நடைபெற வேண்டும். இதில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது.

மேலும் கரூர் மாநகரில் கண்காட்சி அரங்கம், மாநாட்டு அரங்கம், திறன் மேம்பாட்டு பயிற்சி அரங்கம், ஜவுளி வடிவமைப்பு மையம், ஜவுளி சோதனை மையம் ஆகியவை அடங்கிய வர்த்தக மேம்பாட்டு மையம் மத்திய அரசினுடைய ஏற்றுமதி திட்டங்களுக்கான வர்த்தக உள்கட்டமைப்பு என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

திட்ட அறிக்கை

ரூ.47 கோடி மதிப்பிடப்பட்ட இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய மந்திரியிடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் சமர்ப்பித்தனர். அப்போது மத்திய மந்திரி பியூஸ் கோயல், கரூர் ஜவுளி கருத்தரங்கிற்கு வருகை புரிவதாகவும், கரூர் வர்த்தக மேம்பாட்டு மையம் அமைக்க ஆவன செய்வதாகவும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, கோவை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் சுகுமார், இணை செயலாளர் சேதுபதி, செயல் குழு உறுப்பினர்கள் திருமூர்த்தி, ரவி, ஜெகதீசன், மதன் மற்றும் உறுப்பினர் நல்லசிவம், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story