பட்டாசு ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை


பட்டாசு ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை
x

குமுளூர் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு அருகே செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி

பட்டாசு ஆலை

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே குமுளூர் கிராமத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் நாட்டு வெடி, பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த பட்டாசு ஆலையில் நாட்டு வெடி, பட்டாசுகள் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. இதில் பெண்கள் உள்பட 7 பேர் பணியாற்றி வருகின்றனர். வீடு, பட்டாசு ஆலை மற்றும் விற்பனை கடை என அனைத்தும் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது, ஆலையை சுற்றிலும் வீட்டுமனைகள் அதிகளவில் உள்ளன. ஆனால், நாட்டு வெடி, பட்டாசு தயாரிக்கும் ஆலை உள்ளதால் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி குடியேற கிராம மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இதனால், குமுளூர் கிராம மக்கள் அச்சமடைய தொடங்கினர். தற்போது, மக்கள் தொகை பெருக்கம் மற்றும் கிராமம் விரிவாக்கம் காரணமாக பட்டாசு ஆலையை சுற்றிலும் தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன.

இந்தநிலையில், மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் வாணவேடிக்கை தயாரிக்கும் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 5 பேர் உடல் சிதறி இறந்தனர். ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லை அருகே அத்திப்பள்ளியில் கண்டெய்னர் லாரியில் இருந்து பட்டாசு கடைக்கு வெடியை இறக்கிய போது ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் இறந்தனர். இந்தநிலையில், அரியலூர் மாவட்டம் விரகாலூரில் 9-ந் தேதி நடந்த வெடி விபத்தில் 12 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, குமுளூர் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு அருகே செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story