மனிதா்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல ஆராய்ச்சி-சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தகவல்


மனிதா்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல ஆராய்ச்சி-சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தகவல்
x

மனிதா்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல ஆராய்ச்சி நடக்கிறது என சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் கூறினார்.

திருச்சி

கலந்துரையாடல்

திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் (என்.ஐ.டி.) சந்திரயான் திட்டம் பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு என்.ஐ.டி. இயக்குனர் அகிலா தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான்-3 திட்ட இயக்குனருமான வீரமுத்துவேல் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அடிப்படையில் விண்வெளி ஆராய்ச்சிகள் நாம் உள்ள பால்வெளி மண்டலம், கோள்கள், நட்சத்திரங்கள் போன்றவை தோன்றிய விதம் குறித்து நாம் இன்றும் தேடிக்கொண்டு தான் இருக்கிறோம். விண் ஆராய்ச்சிகளுக்கு நம் அருகில் இருக்கும் துணைக்கோளான நிலவு முதன்மையாகும்.

ஆராய்ச்சிகள் நடக்கிறது

ஏனென்றால் பிற கோள்களுக்கு செல்லும் நுழைவு வாயிலாக நிலவு உள்ளது. பூமியில் இருந்து விண்ணுக்கு ராக்கெட் அனுப்புவதை விட நிலவில் இருந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டால் ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருளின் அளவை குறைக்க முடியும். மேலும் தேவையான எரிபொருளை நிலவில் இருக்கும் தண்ணீர் மூலம் எரிபொருளாக மாற்றும் தொழில்நுட்பம் குறித்து ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மேலும் வருங்காலங்களில் மனிதா்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லும் வகையில் ெதாடர்ந்து விண்வெளி ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நிலவின் தென் துருவத்தில் ஏராளமான கனிமங்கள் இருப்பதால் அதில் தரைஇறங்கிய முதல் நாடாக சாதனை படைத்துள்ளோம்.

சந்திரயான்-3 சந்தித்த சவால்கள்

வளா்ந்த நாடுகளான அமெரிக்கா 3 முறையும், ரஷ்யா 11 முறையும் நிலவை அடையும் முயற்சியில் தோல்வி கண்டன. இந்தநிலையில் நாம் 2-வது முயற்சியிலேயே வெற்றி கண்டுள்ளோம் என்பது பெருமைக்குரிய விஷயம்.

சந்திரயான்-3 ரோவர், தரையிறங்கும் முன் நிறைய சவால்களை சந்தித்தது. நிலவில் உள்ள ஈர்ப்பு விசையின் குறைவு, குறைந்த வெப்பநிலை போன்றவை நிலவில் தரையிறங்க சவால்களாக இருந்தன. இருப்பினும் சந்திரயான்-2 திட்டத்தின் மூலம் பாடம் கற்றுக்கொண்டு தவறுகளை சரிசெய்து விஞ்ஞானிகள் குழு அதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டனா். சந்திரயான்-3 ரோவர் ஒத்திகையில் திருச்சி என்.ஐ.டி.யின் பங்கும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக திட்டமிட்டோம்

இதனைத்தொடர்ந்து விஞ்ஞானி வீரமுத்துவேல் சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி குறித்தும், சவால்கள் குறித்தும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதன்விவரம் வருமாறு:-

கேள்வி:- சந்திரயான் தரையிறங்கும்போது நிலவில் உள்ள தூசி படலம் லேண்டரை பாதித்ததா?

பதில்:- நிலவில் உள்ள கரடுமுரடான நிலப்பரப்பும், தூசு படலமும் ரோவர் தறையிறங்குவதற்கு கடினம் தான். ஆனால் அதனை முன்னதாக திட்டமிட்டு மெதுவான லேண்டிங் மூலம் தரையிறக்கி 3 மணி நேரம் கழித்து தான் ரோவர் வெளிவந்தது.

அதனால் லேண்டரும், ரோவரும் எந்த பாதிப்பும் அடையவில்லை. ஆனால் இதை விட செவ்வாய் கிரகத்தில் தூசி படலம் அதிகம் உள்ளது. தூசிபுயல் கூட செவ்வாயில் அடிக்கடி நிகழும் ஒன்றாக உள்ளது, அதையும் சமாளித்து செவ்வாயில் சந்திரயான் போன்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

கேள்வி:- இந்தியா எப்போது மனிதனை விண்ணுக்கு அனுப்பும்?

பதில்:- இஸ்ரோ அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. ககன்யான் திட்டம் எப்போது நடக்கும் என்று சரியான கால அளவை என்னால் இப்போது கணித்து சொல்ல முடியாது. ஆனால் விரைவில் அதை எதிர்பார்க்கலாம்.

கேள்வி:- விண்வெளி பொருளாதாரம் சாத்தியமா? இதில் இளைஞர்கள் பங்கு கொள்ள முடியுமா?

பதில்:- இஸ்ரோ அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் வைத்துள்ளோம். இளைஞா்களும் நிச்சயமாக விண் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தொழில் முனைவோர்களாக மாறலாம். இஸ்ரோ அதற்கான தொழில் நுட்பங்களை வழங்க தயாராக உள்ளது.

கேள்வி:- விண்வெளி ஆராய்ச்சி சாமானிய மக்களுக்கு பயன் அளிக்குமா?

பதில்:- அது தான் இஸ்ரோ நிறுவனர் விக்ரம் சாராபாயின் நோக்கமும் கூட. பேரிடர், வேளாண், தொலைதொடர்பு போன்ற சாமானிய மக்களுக்கும் பயன்படக் கூடிய வகையில் தான் இஸ்ரோ பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் விஞ்ஞானி வீரமுத்துவேல் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

நிலவில் தடம் பதித்த நாள்

இதையடுத்து, சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் "சந்திர ஆய்வாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்" என்னும் தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளியின் செயலர் மீனா தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை செயல் அதிகாரி சந்திரசேகரன், இயக்குனர் அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மைய இயக்குனர் விஞ்ஞானி சங்கரன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சந்திராயன்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

முன்னதாக பள்ளியின் தலைமை செயல் அதிகாரி சந்திரசேகரன் பேசுகையில், ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி சந்திராயன்-3 நிலவில் தடம் பதித்த நாள். அன்று உலகையே திரும்பி பார்க்க வைத்தது. நமது விருந்தினர்கள் இருவரும் திருச்சியில் படித்தவர்கள். இவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்வது கடின உழைப்பு வெற்றியை தரும் என்பது தான் என்றார்.

தனி மனித வெற்றியல்ல

விஞ்ஞானி வீரமுத்துவேல் பேசுகையில், சந்திராயன்-3 வெற்றி தனி மனித வெற்றியல்ல. இது நாட்டின் பெருமை. இஸ்ரோ அமைப்புக்கு வெளியேயும் கடின உழைப்பு இருந்தது. பல கட்ட தேர்வுகளுக்கு பிறகே வெற்றி அமைந்தது. அர்ப்பணிப்பும், ஈடுபாடும், புதுமை சிந்தனையும், முறையான தொழில்நுட்ப பயன்பாடும் நமது வெற்றியின் காரணங்கள் என்றார்.

இதையடுத்து, விஞ்ஞானி சங்கரன் பேசுகையில், சந்திராயன் வெற்றியில் 1,000 அறிவியலாளர்கள் பணிபுரிந்தனர். அதன் தலைவராக, வழிநடத்துனராக வீரமுத்துவேல் பணியாற்றினார். ஒரு வகையினர் கடின உடல் உழைப்பை தருபவர்கள். இரண்டாம் வகையினர் மூளையை அதிகம் பயன்படுத்துபவர்கள். இது இரண்டும் இணைந்தால் தான் வெற்றி. வானம் பெரியது என்றாலும் மூளையின் செயல்பாடுகள்தான் முக்கியம். மூளை நமது மிகப்பெரிய ஆயுதம். அதுவே நம்மை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும் என்றார்.

பரிசு

இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் கேட்ட வினாக்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பதிலளித்தார்கள். தொடர்ந்து விளையாட்டு, கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் சிறந்த மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கி ஊக்கப்படுத்தினார்கள்.

முன்னதாக பள்ளி முதல்வர் பத்மா சீனிவாசன் வரவேற்றார். இதில் டால்மியா சிமெண்டு முன்னாள் இயக்குனர் கோபால்சாமி, பள்ளி தலைவர் பி.வி.தோட்டா ராமானுஜம், டீன் கணேஷ், அகாடமி இயக்குனர் ரவீந்திரநாத் குமார், துணை முதல்வர்கள் ரேகா, ரேணுகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி மாணவ தலைவி ஹரிபிரியா நன்றி கூறினார். இவ்விழாவில் ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீசங்கரா மெட்ரிக் பள்ளி மற்றும் சந்தானம் வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story