திடீர் மழையால் ஆற்றில் வெள்ளம்; கரை திரும்ப முடியாமல் தவித்த 70 பேர்


திடீர் மழையால் ஆற்றில் வெள்ளம்; கரை திரும்ப முடியாமல் தவித்த 70 பேர்
x

வத்திராயிருப்பு அருகே திடீர் மழையால் ஆற்றில் வெள்ளம் வந்ததால், மறுகரைக்கு வர முடியாமல் 70 பேர் தவித்தனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அத்தி கோவில் ஆற்றின் கரையில் தர்கா உள்ளது. இந்த தர்காவுக்கு மதுரை, வருசநாடு, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் 70-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து திரும்பியபோது திடீரென மலைப்பகுதியில் பெய்த கன மழையால் அத்தி கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே ஆற்றைக் கடக்க முடியாமல் 70-க்கும் மேற்பட்டோர் தவித்தனர்.அப்பகுதியில் தொலை தொடர்பு கிடைக்காததால் தகவல் தெரிவிக்க முடியாமல் 3 மணி நேரமாக அவர்கள் தவித்தனர்.

பிறகு ஆற்றில் நீர்வரத்து குறைந்தது. பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த கயிற்றின் மூலம் ஆற்றை கடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்தனர். அனைவரும் கரை திரும்ப தீயணைப்பு வீரர்கள் உதவினர். அவர்களிடம் வத்திராயிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் விசாரணை நடத்தினார். யாருக்கும் பாதிப்பு இல்லை என்று தெரியவந்ததும், அனைவரும் அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story