ஆர்.கே. பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி


ஆர்.கே. பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி
x

ஆர்.கே.பேட்டை அருகே மகளிர் சுயஉதவிக் குழு பெண்களிடம் பணம் வசூல் செய்ய மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர்

ஆர்.கே.பேட்டை,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பைபாஸ் ஏரிக்கரை தெருவில் வசித்து வருபவர் ரோகித் குமார் (வயது 40). இவரது மனைவி யோகேஸ்வரி (33). இவர் மகளிர் சுய உதவி குழு பெண்களிடம் பணம் வசூல் செய்யும் வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாலாபுரம் கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழு பெண்களிடம் பணம் வசூல் செய்வதற்காக யோகேஸ்வரி சென்றார். அவரை திட்ட அதிகாரி ரவி (50) தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். வழியில் தியாகபுரம் கிராமம் அருகே உள்ள சிறிய பாலத்தின் அருகே மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறியதில் யோகேஸ்வரி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை உடனடியாக சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை யோகேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் இறந்த யோகேஸ்வரிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.


Next Story